கொழும்பை அண்மித்த பகுதியில் திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்ட நபர் ஒருவர், மதுபோதையில் தனது வீட்டுக்குச் செல்லும் வழியை மறந்து, தனது கள்ளக் காதலியின் வீட்டுக்குச் சென்ற சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
தனது நிறுவனத்தில் பணிபுரியும் நண்பரின் மகளுடைய திருமண நிகழ்வில் கலந்துகொண்ட குறித்த நபர், நண்பர்களுடன் இணைந்து மது அருந்தியுள்ளார். அளவுக்கு அதிகமாக மது அருந்திய அவர், திருமண நிகழ்வில் நடைபெற்ற நடனத்திலும் கலந்துகொண்டு அங்கிருந்தவர்களுக்கு இடையூறாக நடந்துகொண்டுள்ளார்.
இதையடுத்து நண்பர்கள் அவரை வெளியே அழைத்துச் சென்று, முச்சக்கர வண்டியொன்றில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், அவரது மனைவிக்கு தொலைபேசியில் தொடர்புகொண்ட நண்பர் ஒருவர், கணவரின் நிலைமையை விளக்கி, அவரை முச்சக்கர வண்டியில் அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், அரை மணி நேரமாகியும் கணவர் வீடு திரும்பாததால் மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. , தனது கணவர் அடிக்கடி சென்று வரும் வீடொன்று தொடர்பில் அவருக்குத் தகவல் கிடைத்திருந்ததால், முச்சக்கர வண்டியில் அந்த வீட்டைத் தேடிச் சென்றுள்ளார்.
அங்கு சென்றபோது, வீட்டின் முன்பாக தனது கணவர் நிற்பதைக் கண்டுள்ளார். அவர் அருகில் சென்றதும், வீட்டின் கதவு திறக்கப்பட்டு ஒரு பெண் வெளியே வந்துள்ளார்.
அப்போது மனைவி, “இவள் தானா அது?” எனக் கேட்டதும், கணவரின் போதை தெளிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, “நான்... நான் வீட்டுக்குச் செல்லும் பாதையைச் சற்றுத் தவறிவிட்டேன்” என கணவர் சமாளிக்க முயன்றுள்ளார்.
அதற்கு மனைவி, “வீட்டுக்குச் செல்லும் பாதைதான் தவறிவிட்டது; இந்த வீட்டுக்கு வரும் பாதை மட்டும் நன்றாக நினைவில் இருக்கிறதே! வா, உனக்கு வீட்டுக்குச் செல்லும் பாதையைக் காட்டுகிறேன்” எனக் கூறி, கணவரின் சட்டைக் காலரைப் பிடித்து முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்றுள்ளார்.
பின்னர், கணவரை வீட்டின் முன்பாக இறக்கிவிட்டு கதவை மூடியுள்ளார். இதனால், குறித்த நபர் தனது சொந்த வீட்டின் படிக்கட்டுக்கு அருகிலேயே இரவைக் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.